"புருஷன் குடியை மறந்து ஒழுங்காக திருந்தி வாழனும்னு வேண்டிக்கிட்டு பழனிக்கு நடந்தே வர்றேன்னு நேந்துக்க... நல்லது நடக்கும்...." பூசாரி துன்னூறு பூசிக் கொண்டே சொன்னார்... முருகன் படம் போட்ட காலண்டருக்கு முன்னால் நின்று பூசாரி சொன்னதுபடியே வேண்டிக் கொண்டு விரதமும் இருந்தாள் விருமாயி. பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நாளும் வந்தது... அரோகரா கோஷத்தோடு வழியனுப்பி வைத்தார்கள்... புருஷன் அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்... நடந்து கொண்டே இருந்தாள்... வழியில் விருமாயியின் தம்பி வழிமறித்தான்... சிறுவன்தான் என்றாலும் வெடிப்பானவன் அவன்... "அக்கா தனியாவா பழனிக்குப் போற...?" "ம்..." என்றபடி நடந்து கொண்டிருந்தாள்... "திரும்பி எப்ப வருவ?" "அஞ்சுநாள் ஆகும்.." "இந்த அஞ்சுநாளும் மாமா குடிச்சு கும்மாளம் போட்டா என்ன பண்ணுவ?" சுருக்கென்றிருந்தது... சிறிது தூரம் யோசித்துக் கொண்டே வந்தவள்... பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஒருவரிடம் கேட்டாள்... "அண்ணே... பழனிக்குப் போற பஸ்சு இங்க நிக்குமா?"