"இப்டியொரு அக்கிரமமெல்லாம் நம்மநாட்லதான்யா நடக்குது" என்று விரக்தியாக சொல்லியபடியே வந்து குந்தினார் மாரிச்சாமி. ஏற்கெனவே அவருக்கு முன்பாக வந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளையன், "என்னய்யா அக்குருமத்தக் கண்டுட்ட?" என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டார். "ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொல்றேம்ப்பா" என்று ஆரம்பித்த அவர் "சூடா ஒரு டீ போடுப்பா" என்று கேட்டார். "நீங்களே சூடாத்தான வந்திருக்கீங்க... மொதல்ல நடந்ததச் சொல்லுங்க" என்றதும்... படபடவென பொரிந்தார் மாரிச்சாமி... "ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொன்றேன்ப்பா... அந்த மாநிலத்துல இருக்கிற கலஹண்டி பகுதியைச் சேர்ந்தவரு தனா மஜி. இவரு சம்சாரம் அமன்கடிக்கு உடம்பு சவுரியமில்ல. படக்-குன்னு அங்கனக்குள்ள இருக்க ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போனாரு. ஆனா சிகிச்சை பலனனிக்காம அந்த அம்மா செத்துப்போச்சு." "அதுக்கு ஏன்யா நீ இந்தக்குதி குதிக்கிற... பொறப்பு எறப்பு சகசம்" என்று பேச்சை முடிக்கப்பார்த்தார் வெள்ளையன். "சொல்றத முழுசாக்கே...