"இப்டியொரு அக்கிரமமெல்லாம் நம்மநாட்லதான்யா நடக்குது" என்று விரக்தியாக சொல்லியபடியே வந்து குந்தினார் மாரிச்சாமி.
ஏற்கெனவே அவருக்கு முன்பாக வந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளையன், "என்னய்யா அக்குருமத்தக் கண்டுட்ட?" என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டார்.
"ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொல்றேம்ப்பா" என்று ஆரம்பித்த அவர் "சூடா ஒரு டீ போடுப்பா" என்று கேட்டார்.
"நீங்களே சூடாத்தான வந்திருக்கீங்க... மொதல்ல நடந்ததச் சொல்லுங்க" என்றதும்... படபடவென பொரிந்தார் மாரிச்சாமி...
"ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொன்றேன்ப்பா... அந்த மாநிலத்துல இருக்கிற கலஹண்டி பகுதியைச் சேர்ந்தவரு தனா மஜி. இவரு சம்சாரம் அமன்கடிக்கு உடம்பு சவுரியமில்ல. படக்-குன்னு அங்கனக்குள்ள இருக்க ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போனாரு. ஆனா சிகிச்சை பலனனிக்காம அந்த அம்மா செத்துப்போச்சு."
"அதுக்கு ஏன்யா நீ இந்தக்குதி குதிக்கிற... பொறப்பு எறப்பு சகசம்" என்று பேச்சை முடிக்கப்பார்த்தார் வெள்ளையன்.
"சொல்றத முழுசாக்கேளுய்யா... இதுக்கப்பறம்தான் அந்த அக்குருமம் நடந்திருக்கு... இவரு ஊரு ஆஸ்பத்திரியில இருந்து 60 கிலோ மீட்டர் தூரம் இருக்கு... அதனால பொணத்தை கொண்டு போக ஆம்புலன்ஸ் வேணும்னு கேட்டிருக்காரு... ஆனா ஆஸ்பத்திரிக்காரய்ங்க அதெல்லாம் முடியாதுன்னு ரொம்வும் ட்ரிக்ட்டா சொல்லீட்டாய்ங்க..."
"அப்பறம்?"
"என்னா செய்யிறதுன்னு தனா கொழம்பிப்போயிட்டாரு... பக்கத்துல அவரு மக அழுதுக்கிட்டே நிக்கிது... படக்குன்னு மனச கல்லாக்கிக்கிட்டு... பொனத்தை ஒரு பாயில சுத்தி இன்னொரு போர்வையையும் மேல சுத்தி இறுக்கமாக கட்டிட்டாரு. அப்புறம் படக்குன்னு தூக்கி தோள்ல வச்சிக்கிட்டு நடையக் கட்டிட்டாரு..."
"அடக்கொடுமையே..."
"அட ஆமான்றேன்... இவரு பொணத்த தூக்கிக்கிட்டு முன்ன நடந்துபோக... அவரு மக அழுதுக்கிட்டே பின்ன வர... ஊரே வேடிக்கை பாக்குதுய்யா..."
"அத போட்டா புடிச்சி ஒரு பத்திரிகையில செய்தி வந்திருக்கு... ஒருத்தன் இத இப்ப என்னம்மோ பேஸ்புக்குன்றாய்ங்களே அதுல பரப்பி விட்டிருக்கான்... அதனாலதான் இந்த விஷயம் இந்தியா முழுக்கப் பரவி சந்தி சிரிக்கிது இந்திய மானம்..."
"ஏன் போட்டா புடிச்சவன் இவருக்கு ஆதரவா ஆஸ்பத்திரிக்காரன்ட்ட சண்ட பிடிச்சிருக்கலாம்ல.. இல்ல ஆம்புலன்ஸ்க்கு காசு குடுத்திருக்கலாம்ல...?" என்று வெள்ளையன் கேக்க..
"காசு குடுத்திருந்தா அப்போதைக்கு பிரச்சன முடிச்சிருக்கும்... அடுத்து ஒருஒரு பொணத்துக்கு-ம் ஒருஒருத்தன் காசு குடுப்பானா? இல்ல கெடைப்பானா... கிளைய வெட்டக்கூடாதுய்யா... ஊழல்ன்ற மரத்தையே வெட்டிச்சாய்க்கனும்... இந்த மாதிரி அம்புட்டு அரசு ஆஸ்பத்திரியிலயும் நடக்குது... டெச்சர்ல வச்சித் தள்ளுறதுக்கு... சக்கர நாற்காலியில வச்சி தள்ளுறதுக்கு-... ஆப்ரேசன்க்கு அப்புறம் பெட்ல கொண்டாந்து போடுறதுக்கு... உசுரோட இருக்குறவரைக்கும் அம்புட்டுக்கும் காசுன்னு பாத்தா இப்ப செத்தப்பிறகும் காசு தேவப்படுது..." என்று தளுதளுததார் மாரிச்சாமி...
"இந்த போட்டாதான் சந்தி சிரிச்சுப்போச்சுல... இனி மேலாச்சும் இந்த மாதிரியான சேவைகள் இலவசமா கிடைக்க அந்த மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கட்டும்... அதுக்கான ஏற்பாட்ட செய்யட்டும்..." என்று வெள்ளையன் சொல்லிய வெள்ளையன் "டீயக்குடிய்யா ஆறுது" என்றார்.
Comments
Post a Comment