"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள்.
சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்...
இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...
ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்.
அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....?
விஷயத்திற்கு வருவோம்.
படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...
மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.
அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம்.
இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.
தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கிவிட்டார்கள்.
இரண்டு ஆண்டுகள் கணவரோடு சேர்ந்து வாழ்ந்தார் ஜெயப்பிரபா... மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை... சிக்கல்கள் தொடர்ந்தன.
18 வயது பூர்த்தியான பெண்ணுக்குத்தான் மணமுறிவு சட்டம் செல்லுபடியாகும் என்பதால், அப்படியே தனது பிறந்தகம் வந்து விட்டார் ஜெயப்பிரபா.
வீட்டிலேயே இருந்து கொண்டிருந்ததால் வெறுமை அவரை பிடித்து உலுக்கியது.
அதன் பிறகுதான் படிக்க வேண்டும் என்ற கெஞ்சலும் அதைத் தொடர்ந்து கிடைத்த அனுமதியும்.
பெற்றோர்கள் அனுமதி கொடுத்தால் போதுமா? பள்ளியில் இந்தப் பெண்ணை சேர்த்துக் கொள்ள வேண்டுமே...
பள்ளி நிர்வாகத்தினர் இந்தப் பெண்ணை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்து பத்திரிகை மூலமாக பிரச்சனையை அணுகி மீண்டும் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்...
இப்போது என்ன அதற்கு என்கிறீர்களா....?
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் கல்வியை எதிர்கொண்ட ஜெயப்பிரபா, +2 அரசுப் பொதுத்தேர்வில் 1136 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இந்த சாதனையை பள்ளி நிர்வாகம் கண்டு அதிசயித்துப் போயிருக்கிறது. மேலும் நொண்டிகோவில்பட்டி கிராமமே மகிழ்ச்சி பொங்க பார்த்திருக்கிறது... மேலும் அவர் வயதுப் பிள்ளைகளுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது...
பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும், ஜெயபிரபாவின் இந்த மதிப்பெண் உதவியிருக்கிறது.
இந்த மாணவிக்கு மருத்துவக்கல்வி கிடைக்கிறதோ இல்லையோ... இவரின் இந்த மதிப்பெண் நொண்டிகோவில்பட்டி கிராமத்தில் உள்ள மாணவிகளின் உயர் கல்விக்கு அரணாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
Comments
Post a Comment