Skip to main content

தும்பிக்கை பெரிதான ரகசியம்!

யானையின் மூக்கு, அதான் தும்பிக்கை எப்படி இருக்கும்? பாதத்தைத் தொடும் அளவுக்கு நீண்டு வளைந்து இருக்கும் அல்லவா? ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தும்பிக்கை அப்படி நீண்டு இருக்கவில்லை. அது குட்டையாகவே இருந்தது. அப்புறம் எப்படி அது நீண்டது?
ஒரு காட்டுல தம்புன்னு யானைக் குட்டி ஒன்று இருந்தது. குட்டையாக இருக்கும் தும்பிக்கையை பெரியதாக மாற்றவேண்டும் என்று அது நினைத்தது. எப்போ பார்த்தாலும் தன் அம்மாவிடம் ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கமும் அதற்கு உண்டு. அதுவும் காட்டுல இருக்குற மற்ற விலங்குகளைப் பற்றிதான் கேட்கும்.
நெருப்புக்கோழி பறவைக்கு பெரிய இறக்கைகள் ஏன் இருக்கு? ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஏன் மேலே நீண்டு இருக்கு? இந்த நீர்யானையோட கண்கள் எப்போதும் சிவப்பாகவே இருக்குதே? எலுமிச்சம் பழச் சுவையை குரங்குகளுக்கு ஏன் பிடிக்கிறதில்லை?,
முதலைகள் இரவு நேரத்தில் உணவை எப்படித் தேடும்? – தினமும் இப்படி ஏதாவது கேள்வியை அம்மாவிடம் தம்பு கேட்டுக்கிட்டே இருக்கும். ஆனால், சில சமயம் அம்மா யானை பதில் சொல்லும். சில சமயம், “உனக்கு வேலையே இல்லையா?”ன்னு செல்லமாகத் திட்டும்.
ஒரு நாள் எல்லா விலங்குகளும் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தன. அப்போது, தம்பு இப்படி கேள்விகளை கேட்க ஆரம்பித்தது. உடனே மற்ற விலங்குகள், “உஷ்ஷ்ஷ்ஷ்....... ஷ்....... ஷ்.......ஷ்.. அமைதியா இரு” என எச்சரிக்கை செய்தன.
ஆனால் குட்டி யானை தம்பு அமைதியாக இருக்கவில்லை. வாய் ஓயாமல் ஏதேதோ கேட்டுக்கொண்டே இருந்தது.
தம்புவின் இந்த செயலால் கோபமடைந்த பஞ்சவர்ணக்கிளி, “உனக்கென்ன முதலைகள் தங்களோட இரவு உணவை எப்படித் தேடிக்கொள்கின்றன என்பதற்கு விடைதானே... நான் சொல்கிறேன்...” என்றது.
“உண்மையாகவா?” ஆச்சரியத்தோடு கேட்டது குட்டியானை.
“உண்மையாகத்தான்... சேரும் பாசியும் அடங்கிய நீர் நிலைக்கு போ... அங்கு சென்றால் முதலைகள் எப்படி இரவு உணவைத் தேடிக்கொள்கின்றன என்று உனக்குத் தெரியும்...” என்றது பஞ்சவர்ணக்கிளி.
கிளி சொன்னபடியே நீர்நிலைக்குச் செல்லத் தயாரானது தம்பு. தனக்குத் தேவையான வாழைப்பழங்கள், பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு நீர்நிலையைத் தேடிச் சென்றது தம்பு.
சிறிதுதூரம் நடந்த பின் ஒரு நீர்நிலை தென்பட்டது.
அமைதியாக இருந்த அந்த நீர்நிலையின் பக்கத்தில் நின்றுகொண்டு, பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்தது தம்பு.
அப்போது நீர்நிலையில் சிறிய அசைவு தெரிந்தது. தம்பு கூர்ந்து பார்த்தது.
அந்தநேரம் நீர்நிலையில் இருந்து ஒரு உருவம் வெளியே வந்தது. கரையில் குட்டி யானை ஒன்று நிற்பதைக் கண்ட முதலை, கண்களைச் சிமிட்டிக் கொண்டது.
உற்சாகம் அடைந்த தம்பு, “உனக்காகத்தான் ரொம்ப நேரமாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்... உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்... உனது இரவு உணவை நீ எப்படித் தேடிக்கொள்கிறாய்...?” என்று கேட்டது.
“ஓ.... அதுவா... பக்கத்துல வா... சொல்கிறேன்...” என்றது முதலை.
ஆர்வமிகுதியால் ஆபத்தை உணராமல் முதலையின் அருகே சென்றது தம்பு. இதுதான் சரியான நேரம் என்று நினைத்த முதலை, லபக் என்று குட்டி யானையின் தும்பிக்கையைக் கவ்வியது.
தான் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்த தம்பு, தும்பிக் கையை விடுவிக்க படாதபாடு பட்டது.
தும்பிக்கையைப் பிடித்த பிடியை விடாமல் தண்ணீருக்குள் தம்புவை இழுக்க முயற்சி செய்தது முதலை.
முதலை தண்ணீருக்குள் இழுக்க... தம்பு வெளியே இழுக்க... தும்பிக்கை நீண்டுகொண்டே போனது.
ஒரு கட்டத்தில் தன் சக்தியை எல்லாம் திரட்டி வெடுக்கென்று தும்பிக்கையை வெளியே இழுத்தது தம்பு. ஆபத்திலிருந்து விடுபட்டு, தடுமாறியபடி தரையில் விழுந்தது.
காயம்பட்ட தன் தும்பிக்கையை பரிதாபமாகப் பார்த்தது தம்பு.
அது முன்பைவிட மேலும் நீண்டு இருந்தது. முதலையின் பற்கள் பட்டதால் ஆங்காங்கே வரிவரியாகவும் இருந்தது.
“ தும்பிக்கை பெரியதாகிவிட்டதே” என்று தம்பு நினைத்துக்கொண்டிருந்தபோது அங்கு பஞ்சவர்ணக்கிளி வந்தது.
“தும்பிக்கை மிகவும் குட்டையாக இருக்கிறது என்று கவலைப்பட்டாயே... அது நீண்டு வளர்ந்துவிட்டதா?... இப்போது சந்தோஷமா?...” என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது பஞ்சவர்ணக்கிளி.
அட சரிதான், தும்பிக்கை நீண்டுவிட்டதே... நாம் நினைத்தப்படி தும்பிக்கை மாறிவிட்டதை தன் அம்மாவிடம் சொல்லக் கிளம்பியது தம்பு.
மூலக்கதை: ருட்யார்டு கிப்ளிங்

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...