Skip to main content

குறும்புத் தலையால் வந்த மரம் - பர்மிய நாட்டுப்புறக் கதை


ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. மியான்மருக்கு (பர்மா) அருகே பர்மிஸ்ட் என்ற தீவு அது. அதிலிருந்து மூன்று பேரைக் கட்டுமரக்காரர்கள் பிடித்து வந்தார்கள். அந்த மூவரில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்கள் மூன்று பேரும் அரசரின் அவையில் நிறுத்தப்பட்டனர். அரசர் அவர்கள் மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?” என்று கேட்டார்.
அமைச்சர் எழுந்து “முதலாமவன் மக்களின் பணத்தையும் அவர்களின் பொருள்களையும் கொள்ளையடித்தவன். அடுத்தவள், சூனியக்காரி. மக்களைப் பல விதமாகப் பயமுறுத்தி, அவர்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கினாள்... கடைசியாக, இருக்கிறானே இவன், பயங்கரமான குறும்புக்காரன். ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு, மக்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோஷம் அடைபவன்...” என்று ஒவ்வொன்றாகச் சொன்னார்.
இதையெல்லாம் கவனமாகக் கேட்ட மன்னர், நிதியமைச்சரை அழைத்தார். “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைக் கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுங்கள். அவர்கள் தங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யுங்கள். வறுமைதான் இவர்களைக் குற்றம் செய்ய வைத்துள்ளது. வறுமையை ஒழித்துவிட்டால் இவர்கள் குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் மன்னர்.
கடைசியாக நின்ற குறும்புக்காரன் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கமாகத் திரும்பிய அரசர், “அவர்களின் குற்றங்களுக்கு வறுமை ஒரு காரணமாக இருந்தது. அதைச் சரி செய்துவிட்டால் அவர்கள் திருடவோ, ஏமாற்றவோ மாட்டார்கள். ஆனால் நீ அப்படியல்ல; குறும்புக்காரன். எப்போதுமே குறும்பு செய்து கொண்டுதான் இருப்பாய். அதனால் உனக்குத் தண்டனை நிச்சயம்” என்று கோபமாகச் சொன்னார் மன்னர்.
காவலாளிகளை அழைத்த மன்னர், “இந்தக் குறும்புக்காரனை கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவன் தலையை வெட்டுங்கள்” என்று ஆணையிட்டார்.
அதன்படி, காவலாளிகள் குறும்புக்காரனை அழைத்துச் சென்று கடற்கரையில் வைத்து தண்டனையை நிறைவேற்றினார்கள். சிறிது நேரம் கழித்துத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அமைச்சர் வந்தார். தலை வெட்டப்பட்டாலும் உடல் கீழே விழாமல் மணற்பரப்பில் நின்றுகொண்டிருந்தது. தலையைக் கூர்ந்து கவனித்தார். அதன் வாய் திறந்திருந்தது. பின்பு பேசவும் ஆரம்பித்தது.
“எனது உடல் கீழே வளைந்து விழுவதற்குள் உனது மன்னரை என்னை வந்து பார்க்கச் சொல். அப்படி இல்லையென்றால், அவர் தலையை இதேபோல் வெட்டுவேன். விரைவாக இதை உன் மன்னரிடம் போய்ச்
சொல்... ம்... ஓடு...” என்று சொல்லி “ஹா...ஹா...ஹா...” என்று மிரட்டும் வகையில் சிரித்தது. தலை மட்டும் பேசுவதைக் கண்ட அமைச்சர் பயந்து போனார். மன்னரைத் தேடி ஓடினார்.
பதறிய முகத்தோடு வந்த அமைச்சரைப் பார்த்த அரசர்,
“என்ன ஆயிற்று? ஏன் உங்கள் முகம் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது. தண்டனை நிறைவேற்றப்பட்டதா, இல்லையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
முகத்தைத் துடைத்துக்கொண்ட அமைச்சர், நடந்தவற்றைக் கூறினார். ஆனால் அரசர் அதை நம்பவில்லை. “பயத்தில் உளறுகிறீர்கள்.” என்றார்.
“இல்லை மன்னா, நான் சொல்வது உண்மைதான். தயவுசெய்து நம்புங்கள். இல்லையென்றால் என்கூட யாரையாவது அனுப்புங்கள். அப்போதுதான் நான் சொல்வது உண்மை என்பதை நீங்கள் நம்புவீர்கள்” என்று அமைச்சர் கெஞ்சிக் கேட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட மன்னர், கூடவே ஒரு பணியாளை அனுப்பினார்; பின்பு ஏதோ நினைத்தவராய் தானும் சென்றார்.
மூவரும் அந்த இடத்தில் வந்து நின்றார்கள். ஆனால், அந்தத் தலை அமைதியாக இருந்தது. உடல் சரிந்து கீழே கிடந்தது. அமைச்சரைக் கோபமாகப் பார்த்த மன்னர், “நீங்கள் சொன்னது பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது” என்று ஆத்திரமாகக் கூறினார். “குற்றம் யார் செய்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். பொய் சொன்ன குற்றத்திற்காக அமைச்சரின் தலையை வெட்டுங்கள்” என்று பணியாளுக்கு ஆணையிட்டார் மன்னர்.
அதன்படியே பணியாள் அவரின் தலையை வெட்டி வீழ்த்தினார். அப்போது பயங்கர சிரிப்புச் சத்தம் கேட்டது. அதுவரை அமைதியாக இருந்த அந்தத் தலைதான் இப்போது பெருங்குரலில் சிரித்தது.
“மன்னரே! நான் இறந்துவிட்டால் என்ன, என்னுடைய சேட்டைகளும் குறும்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு “ஹா...ஹா...ஹா” என்று சிரித்துக்கொண்டே இருந்தது அந்தத் தலை.
தான் மிகப் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்ந்த அரசர், அமைச்சரை எண்ணி மிகவும் வருந்தினார். இதுபோன்ற பல தொந்தரவுகள் இந்தத் தலையால் வரக்கூடும் என்று நினைத்த அவர், பணியாளை அழைத்து,
“ஆழமாகக் குழிதோண்டி இந்தத் தலையைப் புதைத்துவிடு” என்று ஆணையிட்டார்.
அதன்படியே பணியாளனும் செய்தான். சில மாதங்கள் கழிந்தன.
குறும்புக்காரனைப் புதைத்த இடத்தில் மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் பல காய்கள் கொத்துக்கொத்தாய் காய்த்து நின்றன. அந்தக் காயை பர்மிய மக்கள் ‘கான்-பின்’ மரம் என்று அழைத்தார்கள். இந்தப் பெயரே பின்னாட்களில் ‘ஆன்-பின்’ என்றாகிப்போனது. அதுதான் தென்னை மரம்.
நீங்கள், அந்தக் காயைக் கையில் எடுத்துக் குலுக்கினால், ஒரு சலசலப்பு சத்தம் கேட்குமில்லையா? அந்தச் சத்தம் உங்களை விளையாட அழைக்கும். அந்தக் காய்தான் குறும்புக்காரனின் தலை. நெடிதுயர்ந்த தண்டுதான் அவனது உடல். அன்றுமுதல் இன்றுவரை அந்தச் சலசலப்புச் சத்தம் அலையோசையோடு சேர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...