Skip to main content

ஈட்டனும் எழிலும்


அந்த டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.... “சொர்க் சொர்க்” என டீ ஆற்றும் சத்தமும், “சளக் சளக்” எனக் கண்ணாடி டம்ளர்கள் கழுவும் சத்தமும் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தன.
“அண்ணே ஸ்ட்ராங்க” ஒரு டீ... மீடியமா ஒரு டீ... சைனா டீ.. காபி, பால், மசாலா பால்” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்...
அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு அவரவர்களுக்குத் தேவையான பானங்களை டீ மாஸ்டர் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்...
இந்த டீக்கடையில் இருக்கும் சர்க்கரைச் சட்டியை நம்பி, ஈட்டன் என்ற ஈயும், எழில் என்ற எறும்பும் வாழ்ந்துவந்தன.
தனக்கு இறகுகள் இருப்பதாலும், எங்கு வேண்டுமானாலும் பறக்க முடியும் என்பதாலும் ஈட்டனுக்கு தற்பெருமை அதிகம். இதைச் சொல்லி எழிலை எப்போதும் கேலி செய்துகொண்டே இருக்கும். இதை ஈட்டன் வாடிக்கையாக வைத்திருந்தது.
எழில் இதையெல்லாம் பொருட்படுத்தாது. தனது வேலை மட்டுமே கதி என்று இருக்கும்.
ஒருநாள்…
“எழில்” என்று சத்தமாகக் காதருகே கூப்பிட்டு விட்டு ஒரு சர்க்கரைத் துண்டை எடுத்துக் கொண்டு விர்ரென்று பறந்து சென்றது ஈட்டன்.
வேகவேகமாக ஊர்ந்து கொண்டிருந்த எழில், தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி “என்ன” என்பது போலப் பார்த்தது. ஆனால் அது பார்ப்பதற்குள் ஈட்டன் மறைந்துவிட்டது. பிறகு மீண்டும் படக்கென்று பறந்து வந்து எழில் முன்பாக வந்து நின்றது.
“நான் எனது வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். வேலைச் செய்யுறப்ப தொந்தரவு செய்யாதேன்னு எத்தனை முறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... ஏன் இப்படிச் செய்து என்னை வம்புக்கு இழுக்குறே?” என்று கோபமாகக் கேட்டது எழில்.
எழிலை ஒரு கேவலப் பார்வை பார்த்த ஈட்டன் “ஆமாம்! பெரிய வேலை... ஊருல இல்லாத வேலை... நீ இப்படி ஊர்ந்து ஊர்ந்து போய் ஒரு சர்க்கரைத் துண்டைக் கொண்டு போறதுக்குள்ள நான் நூறு துண்டுகளை சேர்த்துடுவேன்” என்று இளக்காரமாகச் சொன்னது.
ஈட்டனின் இந்த வார்த்தையைக் கேட்ட எழிலுக்கு ஒரே கோபம். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சர்க்கரைத் துண்டை வாயில் கவ்விக்கொண்டு சென்றது.
அதனைச் செல்ல விடாமல் முன்னே வந்து கத்தியும், காதோரம் ரீங்காரமிட்டும் தொல்லை கொடுத்தது ஈட்டன். பொறுமை இழந்து “இப்படிக் கேலி செய்யுறனே, உனக்கு ரோஷமே இல்லையா...” என்று சொல்லிச் சிரித்தது ஈட்டன்.
தான் தூக்கி வந்த சர்க்கரைத் துண்டைக் கீழே வைத்த எழில், இரு கைகளாலும் முகத்தைத் துடைத்துக்கொண்டது. கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தது. பின்பு சாந்தமாகப் பேச ஆரம்பித்தது.
“ஈட்டன்...! உன்னைப் போல என்னால பறக்க முடியாது. அது உண்மைதான்... ஆனால், அதுக்காக நான் எப்பவும் வருந்தியது இல்ல. உனக்கு இருக்கிறது எனக்கு இல்லையேன்னு பொறாமைப்பட்டதும் இல்ல. எங்களுக்கும் மிகச் சிறந்த உடலமைப்பு இயற்கையிலேயே இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இடைமறித்தது ஈட்டன்.
“என்னது, மிகச்சிறந்த இயற்கை உடலமைப்பா...! உன்னிடமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டது.
பொறுமையாகக் கண்களை மூடி ஆமோதித்த எழில் தொடர்ந்தது,
“உண்மைதான்... ஒருநாள் முழுக்க உழைக்குற சக்தியை இயற்கை எங்களுக்குக் கொடுத்திருக்கு... ஓய்வுன்னா என்னான்னே எங்களுக்குத் தெரியாது... உழைப்புக்கு உதாரணமா மனிதர்கள் எங்களைதான் சொல்லுறாங்க... ஒற்றுமையின் சின்னமாகவும் எங்களைத்தான் அவுங்க நினைக்கிறாங்க... ஆனால், உனக்கு இப்படிச் சிறப்புகள் இல்லை” என்று சொல்லிவிட்டு மீண்டும் சர்க்கரைக் கட்டியை வாயில் கவ்விக் கொண்டு புறப்படத் தயாரானது.
“நில்... நில்... நில்...” தன் இறகுகளை அகலமாக விரித்து வழிமறித்த ஈட்டன்... “ எங்களுக்குச் சிறப்பில்லை என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டது.
மெதுவாகச் சிரித்துக் கொண்ட எழில் சொன்னது. “அதோ அங்கே பாரேன்... அந்த டீ டம்ளரில் உன் நண்பன் ஒருவன் விழுந்துட்டான்னு அந்த டீயே வேண்டாம்னு ஒருத்தரு டீ கடைக்காரரிடம் சொல்கிறார் பார்... ‘ஏன் அதை எடுத்துப் போட்டுக் குடித்துவிடலாமே’ என்று நீ கேட்கலாம்... ஆனால் அவ்வாறு செய்ய மாட்டார்கள்... காரணம், உன்னைப் போன்றவர்கள் குப்பையிலும், சாக்கடையிலும் போய் உட்காருவீங்க... அப்புறம் சாப்பாடு மீதும் உட்காருவீங்க... அதனால்தான் ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடாதே... நோய் வரும்னு குழந்தைகளுக்கு அறிவுரை சொல்றாங்க...” என்று சொல்லி முடித்த எழில், வேகமாக நடந்து சென்றது.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்த ஈட்டன், எழிலையே பார்த்துக்கொண்டிருந்தது.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...