இடம் : பெங்களூரு பேருந்து நிலையம் அருகே...
பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன... புகையின் நெடி உடலெங்-கும் பரவுகிறது... பேருந்தில் பயணித்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்...
அந்த வெப்பத் தகிப்பிலும் இருவர் பேசிக் கொள்கிறார்கள்... இருவரும் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று அவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது...
பச்சை சட்டை போட்டவர் பார்ப்பதற்கு கொஞ்சம் அப்பாவியாக இருந்தார். தீ எரியும் வெப்பத்திலிருந்து சற்று விலகி நின்ற அவர், சற்றுநேரம் பையை கீழே வைத்து விட்டு “என்னய்யா கொடும... 42 பஸ்களை எரிச்சிட்டானுங்க... தண்ணி மாட்டோம்ன்றதுக்கு இப்டியெல்லாம் கலவரம் பண்ணணுமா?” என்று கத்தினார்...
அவர் அப்படிக் கத்தியும் “என்னங்க... பஸ்ஸை எரிச்சதச் சொல்றீங்களா?” என்று கோடுபோட்ட சட்டைக்காரர் கேட்டுவிட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஒருவாறாக கிரகித்துக் கொண்டார். பின்பு அவரும் பையை கீழே வைத்துவிட்டுத் தொடர்ந்தார்...
“இப்டியெல்லாம் கலவரம் பண்ணிப்பண்ணிதானே பேசித் தீர்க்க வேண்டிய அவ்வளவு விஷயத்திலேயும் நாட்டை அழிச்சிக்கிட்டிருக்கோம்...” என்று இவரும் கத்தியபடியே சொன்னார்.
“என்னா பேசித் தீர்க்கணும்ன்றீங்க...? அதான் சுப்ரீம் கோர்ட்டே தண்ணி திறந்து விடச்சொல்லீருக்கு... கர்நாடக கவுர்மென்டும் தண்ணி திறந்து விட்டிருக்கு... இதுல இவனுங்களுக்கு என்ன வந்துச்சு...? பஸ்ஸை எரிக்கிறானுங்க... அதுவும் ஒரு பொம்பளப்புள்ள பசங்ககிட்ட பெட்ரோல் குடுத்து பஸ்களை எரிக்கச் சொல்லுச்சாம்ல...? “ என்று ஆச்சரித்தோடு கேட்டார் பச்சை சட்டை.
“உண்மைதான் அந்தப் பிள்ளைபேரு பாக்யாவாம்... பஸ் எரிப்பு நடந்த இடத்துலதான் வீடாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஏரியாவுக்கு வந்திருக்கு... ரெம்ப கஷ்டப்படுற குடும்பமாம்... இதை கவனிச்ச யாரோதான் இந்த பிள்ளையை பஸ் எரிப்புக்கு கருவியா பயன்படுத்தியிருப்பதாகச் சொல்றாங்க...”
“எல்லா எடத்துக்கும் ஒண்ணுந்தெரியாத அப்பாவிப் பையனும் பிள்ளைகளும்தான்யா இந்த அரசியல் வியாபரம் பண்றவங்களுக்கு கிடைக்கிறாங்க... நேத்து நம்மூர்ல விக்னேஷ்ன்ற பையன் காவிரி நீரை குடுக்கணும்னு தீக்குளிச்சி செத்துப்போய்ட்டான்... இந்த ஊர்ல பொம்பளப்புள்ளைட்ட பெட்ரோல் கேன்களை கொடுத்து பஸ்களை எரிக்க விட்டிருக்கானுங்க... இப்ப பாருங்க பாக்யாவ கைது பண்ணி பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல்னு ஏகப்பட்ட பிரிவுல வழக்குப்பதிவு பண்ணியிருக்காங்க... இனி அந்த பாக்யாவும் செத்த பொணம் மாதிரிதான்” என்று மருகினார் கோடு போட்ட சட்டை.
“பாவம் சார்... அரசியல்வியாபாரிகளின் உள்நோக்கம் புரியாமல் வெற்றுப்பேச்சு மயங்குகிறவர்களின் கெதியைப் பாத்தீங்களா...?” என்று பரிதாபப்பட்ட பச்சை சட்டை... “உண்மையிலேயே இவங்க கர்நாடக விவசாயிகளுக்காகத்தான் பஸ்களை எரித்து கலவரம் பண்றாங்களாண்ணே?” என்று சந்தேகத்தோடு கேட்டார்.
மெதுவாகச் சிரித்த அவர், “அரசியல்ணே அம்புட்டும் அரசியல்... அனைத்தும் தேர்தலை முன்னிட்டும், ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்றும் செய்யும் அரசியல். இதில் அப்பாவி தமிழர்கள் கன்னடர்களிடம் அடி வாங்குகிறார்கள்... காவிரி நீருக்காக என்று சொல்லி தமிழகத்தில் தீக்குளித்துக் கொள்கிறார்கள்... அப்பாவி கர்நாடக இளைஞர்களோ அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்...” என்று பொரிந்தார்.
பச்சை சட்டைக்கு தூக்கிவாறிப்போட்டது. “என்னண்ணே நடக்குது நம்மளச்சுத்தி... அப்ப விவசாயிகளுக்காக யாருமே இல்லையா?” என்று ஆனமட்டும் கத்தினார்...
அந்த சத்தம் பற்றி எரியும் பேருந்துகளின் தீ யோடு சேர்ந்து எரிந்தே போனது...
Comments
Post a Comment