முல்லாவுக்கு நிரந்தவேலை எதுவும் இல்லை. ஏதோ ஒரு வழியில் வரும் பணமும் விருந்து அன்றாட குடும்பச் செலவுகளுக்கே சரியாய்ப்போய் விடுகிறது. இதுசம்பந்தமாக எத்தனையோமுறை குல்ஷான் சண்டையிட்டிருக்கிறாள். ஆனால் நிரந்த வேலைக்குச் செல்லும் எண்ணம் துளிகூட முல்லாவிடம் இல்லை. அன்று காலையும் அப்படித்தான். முல்லா தனது கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்தபடி கால்களை ஆட்டிக் கொண்டு பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கோபமாக வந்த குல்ஷான், "இப்படியே எத்தனை நாட்களை ஓட்டப்போகிறீர்கள்... நிரந்தர வருமானம் இருந்தால்தானே நாம் சுகமாக வாழ முடியும்...? உங்களின் சொந்த முயற்சியில் எதையேனும் உருவாக்கியிருந்தாலும் பரவாயில்லை... இங்கு அதுவும் கிடையாது..." என்று அலுத்துக் கொண்டாள். "எனது சொந்த முயற்சியில் தாடியையும் மீசையையும் வளர்த்திருக்கிறேனே.." என்று கேலியாகச் சொன்ன முல்லா, "பொறுமையாக இரு... அல்லா நமக்குக் கொடுப்பார்..." என்றும் நம்பிக்கையளித்தார். "ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அல்லா உணவளிக்கமாட்டார். நீங்கள் உங்களின் பணக்கார நண்பர்களிடம் சென்று வேலை கேட்டால் என்ன?...