பல ஆண்டுகளுக்கு முன்பு குய் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சீனாவின் முதலமைச்சருக்கு தேரோட்டும் சேவகனாக பணியாற்றி வந்தான்.
ஒருநாள் இருவரும் தேரில் சென்று கொண்டிருக்கும்போது, குய்-யின் வீட்டு வழியாக செல்ல நேர்ந்தது.
அப்போது குய்-யின் உறவினர்கள் அவன் முதல்வருக்கு தேரோட்டுவதைப் பார்த்து பெருமிதம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், குய்-யின் மனைவியிடம் ஓடோடிச் சென்று,
"விரைவாக வா... உனது கணவர் முதல்வருக்கு தேரோட்டி வருகிறார்" என்றார். உடனே அவளுடைய மனைவியும் ஓடி வந்து பார்த்தாள்.
ஆனால் குய்-இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தலையை உயர்த்திக் கொண்டு, செருக்கான பார்வையுடன் அவளைக் கடந்து சென்றான்.
அன்று மாலை வீட்டுக்கு வந்தான் குய். தன் மனைவி சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்த அவன்,
"நீ ஏன் மிகவும் சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டான்.
"நான் உங்களை விவாகரத்து செய்யப் போகிறேன்..." என்று பட்டென்று சொன்னாள் அவள்.
இந்தப்பதிலால் அதிர்ச்சியடைந்த குய், "ஏன்...? ஏன் என்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று சொல்கிறாய்?" என்றான்.
"நீங்கள் குதிரைவண்டியில் வந்து கொண்டிருக்கும்போது, முதலமைச்சரைப் பார்த்தேன். அவரின் முகத்தில் கருணையும், தன்னடக்கமும் குடிகொண்டிருந்தது. ஆனால் நீங்களோ அவரது தேரோட்டி, ஆனால் நீங்களோ செருக்கோடும் ஆணவத்தோடும் எங்களைக் கடந்து சென்றீர்கள்... இந்த ஆணவம் ஒருபோதும் நன்மை செய்யாது. அதனால்தான் உங்களை விவாகரத்து செய்யப்போகிறேன்" என்று அவள் பதிலளித்தாள்.
தான் தவறுசெய்துவிட்டோம் என்பது அப்போதுதான், அவனுக்கு விளங்கியது. செய்த தவறுக்காக மனைவியிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இனிமேல் அதுபோல் தன்னடக்கமில்லாமல் நடந்து கொள்ளமாட்டேன் என்றும் உறுதியளித்தான்.
மறுநாள் முதல்வரைச் சந்தித்த குய்- நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் சொன்னான். மேலும் தனக்கு வேறொரு பணி வழங்குமாறும் கேட்டுக் கொண்டான்.
"நீ மிகவும் நேர்மையானவன். செய்த தவறை நீ உணர்ந்து விட்டாய். இனி அந்தத் தவறை செய்யமாட்டேன் என்றும் உறுதியளித்திருக்கியாய்..." என்று சொன்ன முதலமைச்சர், அவனுக்கு தன் அலுவலகத்திலேயே பணி வழங்கினார்.
நேர்மை, தன்னடக்க குணம் ஆகியவற்றின் காரணமாக குய் தன் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போனான்.
Comments
Post a Comment