எதிர்க்கட்சித் தலைவர் கணித்தபடியே சட்டமன்றத்துக்கு முன்கூட்டித் தேர்தல் வந்தது.
பரபரத்துப்போனார்கள் உயிரினும் உயிரானவர்கள்...
யாராருக்கு சீட் என்பதில் அடிபுடியாகி ஒருவழியாக 234 தொகுதிக்கும் யாரார் போட்டியிடப்போகிறார்கள் என்று அறிவிப்பும் வந்துவிட்டது.
அதில் திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர் என்று பெஸ்கி ரவி பெயர் இருந்தது.
அறிவிப்பைப் பார்த்ததும் பெஸ்கி ரவியின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன் திரண்டனர்.
“போஸ்டர், டிவி விளம்பரம், அம்பதடில இருந்து நூறடி வரைக்கும் பிளக்ஸ்ன்னு பிச்சு எடுத்துருங்க... காசப்பத்தியெல்லாம் கவலப்படாதீங்க... எம்.எல்.ஏ எலக்சன்ல நம்ம தொகுதியில என்னிய ஒருத்தனும் மறக்கமுடியாதபடிக்கு தீயா வேல பாக்கணும்... சின்னக் கொழந்தைக்குக்கூட என்னிய யார்னு தெரியணும்... சரிதானா” என்று சொல்லிய பெஸ்கி ரவி, ஒரு ஐநூறு ரூபாய் கட்டை பிரித்தார்.
தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டியது... அடுத்தடுத்து செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடித்தாகி விட்டது.
பத்துநாள் எப்படிப்போனதென்றே தெரியவில்லை...
எங்கு பார்த்தாலும் பெஸ்கி ரவி... பெஸ்கி ரவிதான்...
தொண்டர்கள் சொன்னதைச் செய்துவிட்டதாக ஒரு பெருமிதம் பெஸ்கி ரவிக்கு இருந்தது.
“ஏங்க வர்ற வழியில நம்ம குழந்தைய ஸ்கூல்ல இருந்து கூட்டி வந்திருங்க... ஆட்டோக்காரன் இன்னிக்கு வரமாட்டானாம்... இப்பத்தான் போன் பண்ணினான்...”
மனைவியின் இந்தக் கோரிக்கையை முதலில் மறுத்த பெஸ்கி ரவி... ஒரு காரணத்தை முன்னிட்டு பள்ளிக்குச் சென்றார்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து என்னைத் “தெரிகிறதா?” என்றார்.
அவரை மேலுங்கீழுமாக பார்த்த சிறுவன், “தெரியவில்லை” என்றான்.
சுருக்கென்று இருந்தது.
“பிளக்ஸ், போஸ்டர், டிவி என எதிலும் என்னைப் பார்க்கவில்லையா....?”
“டிவியில நான் சோட்டா பீம் மட்டுந்தான் பாப்பேன்...” என்றான் அவன்.
கோபம் கொப்பளித்தது.
“நான்தான் இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதாவது உனக்குத் தெரியுமா?”
“அப்படீன்னா” குரலில் தெனாவெட்டு
அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, “டே... இவரைத் தெரியலையா... இவர் தான்டா நம்ம பிரண்ட் கணேசோட அப்பா...” என்றான்.
“ஐயா... பள்ளிக்கொடத்துக்கு வந்தா நீங்க எந்தப் பிள்ளையோட அப்பான்னு சொன்னாத்தான் தெரியும்... நீங்க எவ்வளவு பெரிய ஆள்னு சின்னப் பயலுகளுக்கு எப்படித் தெரியும்...” என்று வாட்ச்மேன் சிரித்துக் கொண்டே சொன்னதைக் கேட்ட எம்.எல்.ஏ அதன்பிறகு அப்பாவாக மாறினார்.
Very good
ReplyDelete