வட்டத்திற்குள் வளைவாக இரண்டு கோடுகள் வரைந்து இது பந்து என்றாள் ஒருத்தி. காதும் மூக்கும் வாயும் கண்களும் வைத்து இது மனித முகம் என்றாள் ஒருத்தி. அந்த வட்டத்தை சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்த கிராமத்துச் சிறுமி அதை நிலா என்றாள்.
உண்மையில் கிராமத்தையும் விவசாயத்தையும் நம்பி வாழ்ந்த விவசாயி தான் கண்டுபிடித்த கருவிகளை மண்ணுக்கோ மனிதருக்கோ பாதகமாக இல்லாதபடிக்குத்தான் உருவாக்கினான். அவன் வெட்டிய கிணற்றிலிருந்து நீரை எடுத்து விவசாயம் செய்தான். வற்றிப்போனால் மாடுகளை வைத்தோ, ஏற்றத்தை வைத்தோ நீர் பாய்ச்சினான்.
கலப்பை, ஏற்றம், பண்ணையரிவாள், சுருமாடு, கிடைமாட்டுச் சாணம், கிடையாட்டுச் சாணம் இவைகள்தான் அவனது உழைப்புக் கருவிகள். இதைத் தாண்டி அவன் யோசித்ததில்லை. அவனது கண்டுபிடிப்புகள் அவ்வளவு மென்மையானவை.
ஆனால் விவசாயத்தை பெரிதாக்குகிறேன் பேர்வழி என்று வந்த தானியங்கி நாற்றுநடும் இயந்திரமும், மோட்டார் பம்புகளும், உழவு செய்யும் டிராக்டர்களும், கதிரறுவடை செய்யும் இயந்திரங்களும் மண்ணின் மகத்துவத்தைப் புரியாமல் சாலைகளில் காட்டுத்தனமாகத் திரிவதைப் போன்று நமக்கெல்லாம் உணவளிக்கும் நிலங்களின் மீது கட்டற்று ஓடுவதை காண்கிறோம்.
மொத்தத்தில் இப்போது நாம் இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுகளுக்காக இயந்திரங்களே நம்பியுள்ளோம்.
இது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவும் வார்த்தைகளை தயாராக வைத்திருக்கிறோம்.
சமீபத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் சமூக ஆர்வலருமான வங்காரி மாத்தாய் என்ற பெண்மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
பச்சைப் பட்டை இயக்கம் என்றொரு இயக்கத்தின் மூலம் 50 வருடங்களுக்கு முன்பு நாம் கண்ட பூமியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு புறப்பட்ட அவர் கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த இயக்கத்தைப் பரப்பியுள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி உணவுகளை பெறுவது, விவசாய இயந்திரங்களை குறைந்த அளவுக்கு பயன்படுத்துவது, பசுமையைப் பேணுவது, நீர் நிலைகளை வற்றாமல் பாதுகாப்பது உள்ளிட்ட குறிக்கோள்கள் இந்த பசுமைப் பட்டை இயக்கத்தின் அடிப்படை.
நோபல் பரிசை கையில் பிடித்துக் கொண்டு அவர் பேசியவார்த்தைகள் மகத்தானவை. நமது இளம் வயது நாட்களை எண்ணிப் பார்க்கச் செய்பவை.
இதோ அந்த வார்த்தைகள்...
"கென்யாவில் எங்கள் வீட்டின் அருகில் அழகிய ஓடை இருந்தது. அந்த ஓடையில் நான் முகம் பார்ப்பேன். நீரை அள்ளிக் குடிப்பேன். தூய்மையும் அழகும் ஒருங்கே கொண்ட அந்த ஓடைதான் எங்கள் கிராமத்தின் ஈரம். ஆனால் இப்போதோ எங்கள் நாட்டுப் பெண்கள் பலமைல் தூரம் நடந்து சென்று தூய்மையற்ற குடிநீரை கொண்டு வந்து குடிக்கிறார்கள்.
எங்கள் வீட்டின் அருகே தவளைகள் குஞ்சு பொறிக்கும், அந்த முட்டைகளை எடுக்கும் ஆவலில் நான் பலமுட்டைகளை உடைத்திருக்கிறேன். அதற்காக வருந்தியிருக்கிறேன். கால்நடைகள் மட்டுமின்றி, சின்னஞ்சிறு உயிர்களுக்கும் கிராம மக்கள் அடைக்கலமாய் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது அந்த உயிரினங்கள் பல கிராமங்களில் காணப்படுவதில்லை. பறவைகளோடும், விலங்குகளோடும், சின்னஞ்சிறு உயிர்களோடும் நான் விளையாடிய அந்த நிகழ்வுகள் என்ன என்று கூட இப்போதுள்ள குழந்தைகளுக்கு தெரியாமல் வளர்க்கப்பட்டு வருகிறார்கள்.
நமது குழந்தைகளுக்கு இயற்கையோடு வாழ பழகிக் கொடுப்போம். அவர்கள் தொலைத்த இன்பங்களை கொண்டு வந்து சேர்ப்போம்"
ஆக நாம் கடந்த காலங்களில் பெற்ற இயற்கைச் சூழ்நிலையை நம் தலைமுறைகளுக்கும் உருவாக்கித் தர வேண்டியது நம் தலையாய கடமை.
Comments
Post a Comment