முல்லாவுக்கு நிரந்தவேலை எதுவும் இல்லை. ஏதோ ஒரு வழியில் வரும் பணமும் விருந்து அன்றாட குடும்பச் செலவுகளுக்கே சரியாய்ப்போய் விடுகிறது.
இதுசம்பந்தமாக எத்தனையோமுறை குல்ஷான் சண்டையிட்டிருக்கிறாள்.
ஆனால் நிரந்த வேலைக்குச் செல்லும் எண்ணம் துளிகூட முல்லாவிடம் இல்லை.
அன்று காலையும் அப்படித்தான். முல்லா தனது கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்தபடி கால்களை ஆட்டிக் கொண்டு பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
கோபமாக வந்த குல்ஷான், "இப்படியே எத்தனை நாட்களை ஓட்டப்போகிறீர்கள்... நிரந்தர வருமானம் இருந்தால்தானே நாம் சுகமாக வாழ முடியும்...? உங்களின் சொந்த முயற்சியில் எதையேனும் உருவாக்கியிருந்தாலும் பரவாயில்லை... இங்கு அதுவும் கிடையாது..." என்று அலுத்துக் கொண்டாள்.
"எனது சொந்த முயற்சியில் தாடியையும் மீசையையும் வளர்த்திருக்கிறேனே.." என்று கேலியாகச் சொன்ன முல்லா, "பொறுமையாக இரு... அல்லா நமக்குக் கொடுப்பார்..." என்றும் நம்பிக்கையளித்தார்.
"ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அல்லா உணவளிக்கமாட்டார். நீங்கள் உங்களின் பணக்கார நண்பர்களிடம் சென்று வேலை கேட்டால் என்ன?" என்று குல்ஷான் கேட்டதற்கு,
"அதெல்லாம் தேவையில்லை. நான் அல்லாவுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறேன். தினமும் ஐந்து முறை தொழுகிறேன். இதில் ஒருமுறைகூட நான் தவறியதேயில்லை. ஆகையால் அல்லா நம்மைக் காப்பார்" என்று பதிலளித்தார் முல்லா.
"அப்படி அல்லாவிற்கு சேவை செய்யும் நீங்கள், இதறகான மாத ஊதியத்தை அல்லாவிடம் கேட்டுப் பெறலாம் அல்லவா?"
குல்ஷானின் கேள்வியில் ஓர் அர்த்தம் இருப்பதாகப் பட்டது முல்லாவுக்கு... தனக்குள்ளேயே ஏதோ நினைத்துக் கொண்டார். தலையை அசைத்துக் கொண்டார். படக்கென்று தனது கழுதையில் ஏறி காட்டுவழியாக செல்லத் துவங்கினார்.
அங்கே அமைதியான இடம் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டார். தனது காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, பாய் ஒன்றை விரித்தார். அதில் முழந்தாளிட்டு அமர்ந்து கொண்ட அவர்,
"எல்லாம்வல்ல அல்லாவே... நான் உங்களை நினைத்து தினமும் ஐந்து முறை தொழுகிறேன்... ஒருநாள்கூட தொழுகை செய்ய நான் தவறியதில்லை... நான் உங்களின் கருணை மிகுந்த பணியாளன். ஒவ்வொரு பணியாளரும் மாத ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் உங்கள் பணியாளனுக்கு நீங்கள் ஒருமாதம்கூட ஊதியம் தந்ததில்லையே... அது ஏன்? உடனடியாக எனக்கு கொடுக்காமல்விட்ட அனைத்து ஊதியத்தையும் ஒரே தவணையில் தர வேண்டும்..." என்று இறைவனிடம் முறையிட்டார்.
இதையெல்லாம் ஜாபர் என்ற கந்துவட்டிக்காரன் கவனித்துக் கொண்டிருந்தான்.
முல்லாவைப் போல் ஒரு அபத்தமான மனிதன் உலகில் இல்லை என்று அவன் நினைத்த அவன், பக்கத்து கிராமத்திலிருந்து வசூலித்த வட்டிப்பணம், வெள்ளி மற்றும் தங்கக்காசுகள் பத்திரமாக இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டான்.
உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பணத்தையும், வெள்ளி மற்றும் தங்கக்காசுகளையும் முல்லாவின் முன் வைப்போம். அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம் என்று நினைத்த அவன் ஓசைபடாமல் நடந்து வந்தான். அப்போது முல்லா கண்களை இறுக மூடியிருந்தார்.
இதுதான் சரியான நேரம் என்று நினைத்த அவன் பணம் மற்றும் காசுகளை முல்லாவின் முன் வைத்துவிட்டு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். அப்போது ஸ்...ஸ்...ஸ்... என்று சத்தம் கேட்டது. "ஐயோ பாம்பு..." என்று அலறியபடி ஜாபர் அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தான்.
சிறிது நேரம் கழித்து முல்லா கண்களைத் திறந்த முல்லா, பை நிறைய பணம், வெள்ளி மற்றும் தங்கக்காசுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
"இதுநாள்வரை தனக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை அல்லா ஒரே தவணையில் செலுத்திவிட்டார். நான் பாக்கியம் செய்தவன் என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் கத்தினார்.
பின் பணத்தை எடுத்துக் கொண்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார். குல்ஷானிடம் காட்டில் நிகழ்ந்த அற்புதத்தைச் சொன்ன அவர்,
"அல்லா எவ்வளவு கருணையும், பொறுப்பும் மிக்கவர் என்பதை நிரூபித்துவிட்டார். உன் கணவனின் நேர்மையான சேவையை அவர் உணர்ந்து விட்டார். நான் செய்த சேவையும் தொழுகையும் வீண்போகவில்லை..." என்றும் கூறினார்.
வானத்தை நோக்கிப் பார்த்த குல்ஷானும் இதையே சொன்னாள்.
சிறிது நேரம் கழித்து ஜாபர் திரும்ப வந்தான். அங்கே முல்லாவும் இல்லை, பணப் பையும் இல்லை.
உடனடியாக அவன் முல்லாவின் வீடு நோக்கி ஓடிவந்தான். அங்கே குல்ஷான் காசகளை எண்ணிக் கொண்டிருந்தாள்.
முல்லா தனது கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டிருந்தார்.
இருவரையும் பதற்றத்துடன் பார்த்த அவன், "பணப்பையை என்னிடம் கொடுங்கள்... அது என்னுடையது..." என்று சொல்லி அழுதான்.
முல்லாவுக்கு சுருக்கென்று கோபம் வந்தது... "நீ என்ன முட்டாளா?" என்றார்.
"என் பெயர் ஜாபர். நான் வட்டித்தொழில் செய்து வருகிறேன்... இந்த பணப்பை என்னுடையது..." என்று அவன் கண்ணீருடன் சொன்னான்.
"இதேபார் ஜாபர். எனது சேவைக்காக அல்லா கொடுத்த ஊதியம்தான் இந்தப் பணம். இதைப்போய் உன்னுடையது என்கிறாயே...?" என்று இகழ்ச்சியுடன் கேட்டார் முல்லா.
"முட்டாள்தனமாக உள்ளது... அல்லா ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சம்பளம் கொடுத்துக் கொண்டிருப்பாரா? நீ என்ன செய்கிறாய் என்று பார்ப்பதற்காக என்னுடைய பணத்தை உன் முன்னால் வைத்துவிட்டு நான் ஒளிந்து கொண்டேன். அந்த நேரம் பார்த்து பாம்பு வரவே நான் அங்கிருந்து சென்று விட்டேன். அந்த நேரத்திற்குள் நீ பையை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாய்..." என்று நடந்த விஷயத்தை ஒன்றுவிடாமல் சொன்னான் ஜாபர்.
"எல்லாம் வல்ல அந்த இறைவன் கொடுத்த ஊதியத்தை உன்னைப் போன்ற திருடனிடம் கொடுக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்" என்று குல்ஷான் தீர்மானமாகச் சொன்னாள்.
இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று முல்லா யோசித்துக் கொண்டிருக்கையில், "வா குவாசியிடம் செல்வோம்... அங்கே தெரிந்து விடும் யார் சொல்வது உண்மை என்பது" என்று ஜாபர் கோபமாகச் சொன்னான்.
சிறிதுநேரம் பொறுமையாக இருந்த முல்லா, "சரி போகலாம். ஆனால் குவாசி நீதிமன்றத்திற்கு அணிந்து செல்ல எனக்கு நல்ல ஆடைகள் எதுவும் இல்லையே..." என்றார்.
"அதனால் என்ன... என்னுடைய விலை உயர்ந்த ஆடைகளைத் தருகிறேன். அதை அணிந்து கொண்டு நீ வா..." என்று ஐபார் தாராள மனப்பான்மையுடன் சொன்னான்.
"என்னிடம் நல்ல ஷ¨க்களும் இல்லையே..."
"அதையும் நானே தருகிறேன்..."
"டர்பன்..."
"ம்... தருகிறேன்"
"அவ்வளவு தூரம் நான் நடந்தா பயணம் செய்ய வேண்டும்?"
"அந்தக் கவலை உனக்குத் தேவையில்லை... என்னுடைய அரேபியக் குதிரையில் நீ அமர்ந்து வரலாம். நான் நடந்தே வருகிறேன். ஆனால் குதிரையில் வரும்போது, அந்தப் பணப்பையையும் எடுத்து வரவேண்டும்"
முல்லாவுக்கும் ஜாபருக்கும் நடந்த இந்த உரையாடலைத் தொடர்ந்து, முல்லா குதிரையின் மீது புத்தம் புதிய ஆடை, டர்பன் மற்றும் ஷ¨வை அணிந்தபடி ஒய்யாரமாக அமர்ந்து வந்தார். வியர்க்க விறுவிறுக்க ஜாபர் அவரின் பின்னால் நடந்து வந்தான். இப்படியாக அவர்கள் குவாசி நீதிமன்றத்தை வந்தடைந்தார்கள்.
பிரச்சனை என்ன வென்று குவாசி நீதிபதி கேட்டார்.
"கணம் பொருந்திய நீதிபதி அவர்களே... இதோ இந்த மனிதன் வைத்திருக்கும் பணப்பை என்னுடையது. அவனிடம் இருந்து நீங்கள்தான் என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்" என்று ஐ£பர் தழுதழுத்த குரலில் கேட்டான்.
நீதிபதி குவாசி, முல்லாவைப் பார்க்க... முல்லா சிரித்துக் கொண்டே,
"இவன் சொல்வதை நீங்கள் பெரிதாக நினைக்க வேண்டாம். இவன் சற்று புத்தி சுவாதீனமில்லாதவன்... இவன் என் வீட்டிற்கு வந்ததிலிருந்து இந்த பணப்பை என்னுடையது என்று கூறிக் கொண்டிருக்கிறான். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், நான் அணிந்திருக்கும் இந்த உடை, டர்பன், ஷ¨, நான் அமர்ந்து வந்த குதிரை எல்லாவற்றையும் என்னுடையது என்பான்... இன்னும் கொஞ்சம்போனால் என் மனைவியையும் அவனுடையது என்பான்..." என்றார்.
இப்போது நீதிபதி ஜாபரைப் பார்த்தார்.
"ஆமாம்... ஆமாம்... உடை, டர்பன், ஷ¨, குதிரை எல்லாம் என்னுடையதுதான்..." என்று பதட்டத்துடன் சொன்னான் ஜாபர்.
அவன் இப்படிச் சொன்னதும் சபையில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நீதிபதியும் சிரித்துவிட்டார்.
"பாவம்... இந்த வட்டிக்கடைக்காரனுக்கு மூளை குழம்பிவிட்டது"
"அதிக வட்டிவாங்கியும் பலரின் சொத்துக்களை பறிமுதல் செய்தும் சொத்து சேர்த்தானல்லவா அதனால்தான் இறைவன் இவனை புத்திசுவாதீனமில்லாமல் செய்துவிட்டார்"
இவ்விதம் சபையோர் பலவாறாக பேசினார்கள்.
உடனே நீதிபதி, காவலாளிகளை அழைத்து, "இவனை வெளியே கொண்டுபோய் விடுங்கள்..." என்றார். பின் முல்லாவைப் பார்த்து, "நீங்கள் செல்லலாம்... இவன் இனிமேல் உங்களுடைய பொருட்களின் மீது உரிமை கொண்டாடினால் என்னிடம் தகவல் தெரிவியுங்கள். சிறையில் தள்ளிவிடுகிறேன்..." என்றார்.
இறைவன் கொடுத்த ஊதியத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்றார் முல்லா.
Comments
Post a Comment