குரலை நெரித்தஹெலிகாப்டர் சத்தம்
எஸ்.சஞ்சய்
“எட்டுமணிக்கு வண்டி வந்துரும்... ரெடியா இருக்கனும். கைப்புள்ள வச்சிருக்கவங்க
வீட்லயே இருந்துக்கங்க... அம்மா பேசிக்கிட்டிருக்கும்போது அழுதுச்சுன்னா ‘காவிரிய வச்சிக்கோ
அம்மாவ குடு’ன்னு பிளக்ஸ் அடிச்சு ஊரு முழுக்க ஒட்டினது... பரப்பன அக்ஹரஹாரம் என்று
பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து அம்மா மைண்டும் அங்க போயிரும். பேச்சும் மாறிடும்...
அப்புறம் எங்க பொழப்பு நாறிடும்... அதனால சொல்றபடி கேளுங்க” என்று ஆரம்பித்தார் ஒன்றியத்
தலைவர்.
அம்புட்டுபேரும் கோயில்மாடு கணக்கா தலைய ஆட்டுனாய்ங்க...
“ஆத்துமணல் லோடு ஏத்துற அரைப்பாடி வண்டி வரும்... அம்புட்டுபேரும் ஏறிக்கங்க...
ஏறும்போது எறநூறு ரூவா, ஒரு பிரியாணிப் பொட்டலம் தருவோம்... வாங்கிக்கிட்டு ஜாலியா போங்க... ஒரு மைதானத்துல
எறக்கிவிடுவாங்க... சுத்தி மரங்க இருக்கனால வெயிலு தெரியாது... கொஞ்சநேரத்துல அம்மா
வந்துருவாங்க... ஒருமணிநேரம் பேசுவாங்க.. அம்மாவக் கவனிக்கிறீங்களோ இல்லியோ... பக்கத்துல
கோட்டு சூட்டு போட்ட ஒருத்தர கண்டிப்பா கவனிச்சே ஆகனும்... அவரு எப்ப கைய மேல தூக்கி
கைதட்டுறாரோ அந்த நேரம் நல்லா கைதட்டனும்... அவ்ளதான்...” என்று சொன்னவர் கடிகாரத்தைப்
பார்த்து “வண்டி வர்ற நேரமாயிருச்சுன்னு நெனைக்கிறேன்... நான் முன்னாடி கார்ல போறேன்...
வந்து சேருங்க” என்றும் சொல்லிவிட்டு தனது அல்லக்கையிடம் சைகையில் எதையோ சொல்லிவிட்டுப்
புறப்பட்டார்.
கொஞ்ச நேரங்கழிச்சு கர்ரு முர்றுன்னு ஒரு வண்டி வந்திச்சு.
“ஏலா மூக்காயி... ஏலா விருமாயி... ஏலா முத்துப்பேச்சி” என்று குரல்கள் காற்றில்
பறக்க அனைவரும் சித்திரத்திர்ழாக்கு எடுத்த புதுச்சேலையைக் கட்டிக் கொண்டு ஓட்டமும்
நடையுமாகப் போனார்கள். சிறுவர்கள் முதல் பெரிசுகள் வரை பெரிய பண்டலில் வந்து இறங்கிய
கரைவேட்டியில் ஆளுக்கு ஒண்ணை வாங்கிக் கொண்டு ஒரு பெரிய மரத்தின் மறைவில் நின்று கட்டிக்
கொண்டு ஓடினார்கள்.
வண்டி தேர்தலை மனதில் வைத்துப் போடப்பட்ட புது ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சில
அரசல் புரசல் லவ்ஸ் பேச்சுக்கள் ஆங்காங்கே வெளிப்பட்டன. இப்படியே ஒரு மணிநேர பயணத்திற்குப்
பிறகு வண்டி ஆள் அரவமற்ற ஒரு பொட்டலில் நின்றது. கொஞ்சம் கொஞ்சமாக லாரிகள் வர ஆரம்பித்தன.
மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்கள்.
வெய்யில் ஏறத் தொடங்கியது. 10 மணி, 11 மணி, 12 மணி என்று ஏற ஏற கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்கள் தீரத் தொடங்கின. பிரியாணிப்
பொட்டலங்கள் உள்ளே சென்றன. தண்ணீர் தண்ணீர் என்று அங்கேயும் இங்கேயும் குரல்கள் கேட்டன.
அம்மாவை வாழ்த்தும் பாடல்கள் பாடப்பட்டன. டான்ஸ் கீன்ஸ் ஆடுவார்கள் என்று இளைஞர்கள்
எதிர்பார்த்தார்கள். செவிக்குத்தான் உணவு கிடைத்ததே தவிர கண்களுக்கு ஒண்ணும் கிடைக்காமல்
போனதால் அவர்கள் உலவிக் கொண்டிருந்தார்கள்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது... ஒரு பாட்டி மிகுந்த கோவத்தில் “அம்மா எப்பய்யா
வருவாங்க?” என்று கேட்டார்.
“வந்துக்கிட்டே இருக்காங்க...” என்று சங்கடப்பட்டார் அந்தக் கரைவேட்டி.
மணி மூன்றாகியது... அவரவர்கள் அங்கேயே படுத்து உறங்கினார்கள். அவர்களின் நீராகாரம்
எல்லாம் ஆவியாக காற்றில் கலந்தது.
“நான் உங்களோடே இருக்கிறேன்” என்ற குரல் கேட்டு சிலர் எழுந்தார்கள். பலர் எழுப்பிவிடப்பட்டார்கள்.
ஹே என்ற கைதட்டல்கள். அம்மா வந்து விட்டார், அம்மா வந்து விட்டார் , அம்மா வந்து விட்டார், அம்மா வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
“எனனய்யா மாயமா இருக்கு...? நான் கண்ணுமுழிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்... அதுக்குள்ள எப்டியா வந்தாங்க?” என்று ஒருவருக்கு தலை சுற்றியது.
அம்மா பேச ஆரம்பிக்க ஆரம்பிக்க அனைவரும் பக்கத்தில் நின்றவரைப் பார்த்தார்கள்.
அவர் பேசாமல் இருந்தார். இவர்களும் பேசாமல் இருந்தார்கள். அவர் திடீரென்று தட்ட ஆரம்பித்தார்.
அப்போது இவர்களும் கைதட்ட ஆரம்பித்தார்கள்.
இப்படியே ஒருமணிநேரம் போனது... பேச்சும் முடிந்தது.
என்ன பேசினார் எதற்குக் கை தட்டினோம் என்பதுகூட புரியாமல் அனைவரும் எழுந்து பெரிய
கும்பிடாய் போட்டார்கள்.
மெவாகக் கலைந்தார்கள். இரு பெண்கள் மட்டும் எழுந்திருக்கவேயில்லை.
தட்டினார்கள்..
முதுகைப் பிடித்து உலுக்கினார்கள்...
தண்ணீர் தெளித்தார்கள்...
எதுவும் நடக்கவில்லை... சலனமற்றுக் கிடந்தார்கள்.
“எப்போதும் உங்களோடே இருக்கிறேன்னு சொன்னீங்களே எங்கம்மா இருக்கீங்க?” என்று இவர்கள் எழுப்பிய ஒலி அந்த
ஹெலிகாப்டர் சத்தத்தில் யாருக்கும் கேட்கவே இல்லை.
Comments
Post a Comment