மேய்ப்பர் யார்?
----------------------------------
இது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த அம்சம்.
இதுசம்பந்தமாக ஆடு மேய்க்கும் ஒரு பையனிடம் பகல் 10 மணிக்கு ஆபீஸ் ஆரம்பிக்கும் நேரத்தில் கேட்டபோது “உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தா ஆடுக காணாமப் போயிரும்... அடுத்தவன் வுட்டு நெலத்துல வாய வச்சுச்சுன்னா நாந்தான் தெண்டங்கட்டனும்... சாயந்தரமா வாங்க”ன்னுட்டான்.
நம்மளவிட பிஸியான ஆளா இருப்பான்போலனு பொழுதுசாய அவன மீட் பண்ணலாம்னு பாத்தா, அப்பவும் அவன் பயங்கர பிஸி.
பட்டியில் சேர்ந்த ஆடுகளை கண்களாலேயே அளவெடுத்தான்... அவனுக்கு எண்ணத் தெரியாது... ஆனால் எல்லா ஆடுகளின் அடையாளமும் தெரியும்... ஒண்ணொண்ணுக்கும் அடையாளம் வச்சிருப்பான்.
‘வாய்ல மட்டும் வெள்ளை விழுந்த ஆடு, கொம்பு நெளிஞ்ச ஆடு, காது சுருங்குன ஆடு’ இப்டின்னு...
அதுபடி பாக்கும் போது காது சுருங்குன ஆட்டக் காணாம்... அது எங்கனுன்னு தேடிப்போனான். நான் பின்னாடியே போனேன்...
அந்த ஆடு அஜய்குமாரோட (என்னடா கிராமத்துல அஜய்குமாரா னு கேக்காதீங்க... இங்க அஜித் குமார், நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்றெல்லாம்கூட பெயர்கள் இருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் கோபர்நிகஸ் என்ற வார்த்தையை குளோப்ஜாம் என்று கூப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்) நெலத்துல விளைஞ்ச கம்மங்கருத கடிச்சிருச்சின்னு புடிச்சி வச்சிக்கிட்டான்...
என் கூட பேசுனா தெண்டங்கட்டனும்னு சொன்னான்... வேற யாரோ என்ன மாதிரி அடுத்ததா அறிக்கை பத்தி விசாரிக்க வந்திருப்பான் போலன்னு நினைச்சிக்கிட்டேன்...
ஒருவழியா மன்னிப்புக் கேட்டு, கடிச்சி வச்ச கருதுக்கெல்லாம் கணக்குப் பாத்து காசு குடுத்திட்டு வந்தபிறகு என் பக்கத்துல உக்காந்தான்.
“பத்திங்களா எங்க பொழப்ப?” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு “இப்ப என்னய்யா வேணும் உனக்கு?” என்றான்.
“ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்னு சீ” என்று சொல்லி முடிப்பதற்குள்...
“அடச்சீ நிறுத்துய்யா... என்னை ஒழுங்கா படிக்க வச்சிருந்தா நான் ஏன்யா ஆடு மேய்க்கிறேன்...” என்று சொல்லி கோபத்தோடு எழுந்திருக்க முயன்றான்...
“இருப்பா... கோபப்படாத” என்று அமர்த்தினேன்...
“ஆடு மேய்க்கிறத அரசு வேலையா ஆக்குவோம்ன்றீங்க... குப்பை அள்ளுறதுகூடதான் அரசு வேலை... அதை நீ செய்வியா? அதுக்குன்னு ஒரு சமூகத்தை தான வச்சிருக்கீங்க? எங்கள மேலும் மேலும் இதுக கூடயே வாழ வைக்கணும்... எந்த பெரிய வேலைக்கும் நாங்க போயிறக்கூடாது... அப்டித்தான?” என்று சொல்லிவிட்டு போயே விட்டான்...
ஆடுகள் “மே...16” என்று கத்தின.
Comments
Post a Comment